துருக்கி பல்கலைக்கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி அறிவிப்பு!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி நாட்டின் ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது.
அதன் பின்னர், துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் என அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார். இதன் விளையாக மத்திய அரசு முதலில் துருக்கி அதிபர் மகளுக்கு சொந்தமான செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுத்தினத்தின் சேவையை ரத்து செய்வதாக அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் துருக்கிய கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் முதலில் ஜேஎன்யூ மற்றும் ஜாமியா ஆகிய பல்கலைக்கழகங்கள் துருக்கி உடனான தங்களது உறவை முறித்துக்கொண்டது. இந்த நிலையில் மும்மை ஐஐடி-யும் துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
Due to the current geopolitical situation involving Turkey, IIT Bombay is processing suspension of its agreements with Turkish universities until further notice.
— IIT Bombay (@iitbombay) May 17, 2025
இது தொடர்பாக மும்மை ஐஐடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான அதன் ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க பரீசலிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.