“நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும், என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தனது கண்டனத்தினை ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
“திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.