”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” - அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வன்கொடுகை வழக்கில், கோவை மகிளா நீதிமன்றம் இன்று(மே.13) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேரையும் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும் வகையில் சட்டப்பிரிவு 376டி, 376என் ஆகிய பிரிவுகளின்படி இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp
— M.K.Stalin (@mkstalin) May 13, 2025
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.