உண்டியலில் போட்டால் முருகனுக்கே சொந்தம்... ஐபோனை இழந்த பக்தருக்கு கோவிந்தா!
உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கடவுளுக்கே சொந்தம் எனக்கூறிய கோயில் நிர்வாகத்தால் ஐபோனை இழந்த பக்தர் சோகத்துடன் வீடு திரும்பினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆறு மாதங்களுக்கு பின்பு, இன்று இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையிட்டிருந்த தாலி, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
மொத்தமாக 52 லட்ச ரூபாயும், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இதில் வியக்கத்தக்க வகையில் ஒரு செல்போனும் கிடைக்கப் பெற்றது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இவர் சென்னை சிஎம்டிஏ நிர்வாகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்த அவர் செல்போனை பெற முயன்றார்.
அப்போது கோயில் நிர்வாகத்தினர், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் செல்போனில் உண்டு என்றால், அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். குடும்பத்தினருடன் வந்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்துள்ளார்.
அவர் செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி அந்த மனுவில் கேட்டுள்ளார். நிர்வாகத்தினர் நிர்வாக ரீதியான முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அதன் பெயரில் அவர் திரும்பி சென்றுவிட்டார்.