“அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக இருக்கலாம்!” - உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.மகாதேவன் கருத்து!
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக இருக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் கோயில் சொத்துகளை மீட்டெடுத்தது, விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். இந்நிலையில், இவருக்கு இன்று (16.07.2024) சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கலந்து கொண்டு நீதிபதி மகாதேவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து நீதிபதி மகாதேவன் பேசியதாவது:
சாதாரண வழக்கறிஞராக தொடங்கிய பணி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தி உள்ளது. எனக்கு கிடைத்த உயர்வு எல்லாம் இறைவனின் ஆணையால் கிடைத்தது. சென்னையில் மட்டுமே வாழ்ந்த நான் இதுவரை ஆந்திராவை தாண்டி செல்லாமலே உலகில் மிக முக்கிய புத்தகங்களை படித்துள்ளேன். 1996 ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை வழக்கறிஞராக தனி ஆளாக 18ஆயிரம் வழக்குகளை நடத்தி முடித்துள்ளேன்.
நீதிபதியாக இருக்கும் போது இளம் வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் என்றுமே பிரித்து பார்த்தது இல்லை. நீதிபதியாக 11 ஆண்டுகளில் யார் மனதையும் புண்படுத்தியது இல்லை. எனக்கு ஒத்துழைப்பு அளித்த மனைவி, குழந்தைகள், மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நான் நீதிபதியாக இருக்கிறேன் என்பதால் என்னை எதற்காகவும் அணுகாத நண்பர்களுக்கும் நன்றி. சங்க பாடலில் கூறியது போல் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக செயலாற்றலாம் என கூறி நீதிபதி மகாதேவன் உரையை நிறைவு செய்தார்.