இன்றைய தினம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், நாம் தீவிரவாதிகள் - இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு!
இன்றைக்கு முக்கியமான நாள் எனவும், வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.ரஞ்சித் தயாரித்து, ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு நடிக்கும் படம் புளூ ஸ்டார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு பாக்யராஜ், நடிகை கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்,
”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த சில படங்களில் சென்சாரில் பிரச்னை வந்திருக்கிறது. ஆனால் ரிவர்ஸ் போனதில்லை. படத்தின் வசனங்கள் நன்றாக வந்திருக்கிறது. அற்புதமான ஒரு படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறோம் என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம்.
என்னை நம்பும் மக்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த அன்பால் நம்பிக்கையால் தான் நான் இயக்குகிறேன். நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல படமாக புளூ ஸ்டார் இருக்கும்.பின்னணி இசையை இன்னும் பார்க்கவில்லை. புளூ ஸ்டார்க்கு பெரிய முகவரி இசை தான். இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள் தான். அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது. தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது.
பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை சரி செய்வதற்கு, நம் மனதை பண்படுத்துவதற்கு, நம் மூளையில் ஏற்றி வைத்து இருக்கும் பிற்போக்குதனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவை பயன்படுத்துகிறோம். மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியது இந்த சினிமா. நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் தள்ளி விடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்க செய்வோம்” இவ்வாறு அவர் பேசினார்.