‘கல்யாணத்தில் கலந்துகிட்டா ரூ.66,000... யார் பெருசுன்னு அடிச்சி காட்டுவோம்’ - அம்பானியை மிஞ்சிய சீனத் தம்பதி!
சீனத் தம்பதி ஒன்று தங்கள் கல்யாணத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு விருந்தினரையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்ததோடு, ரூ.66,000 மதிப்புள்ள மொய்க்கவரை திருமண பரிசாக கொடுத்துள்ளது.
பணக்காரர்கள் என்றால் இந்தியாவில் இருக்கும் நமது நினைவுக்கு வருவது அம்பானி, அதானிதான். அப்படிப்பட்ட அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி, ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா, மூன்று நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. வெறும் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூ. 1,250 கோடி செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது என்ன பெருசு, இப்ப நா எது பெருசுனு காட்டுகிறேன் பாருங்க என்று கூறுவது போல், சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தின் வீடியோவை திருமணத்திற்கு சென்ற விருந்தாளி ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவரையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்துள்ளனர். மேலும் அங்கிருப்பவர்கள் வெளியே எங்கேயாவது சுற்றிப் பார்க்க விரும்பினால், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி போன்ற சொகுசு காரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருமணம் அவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான இடத்தில் நடைபெற்றது. இதனை ஐரோப்பாவில் இருப்பது போல் உணர்ந்ததாக விருந்தினர்கள் வர்ணித்துள்ளனர். இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் கல்யாணத்திற்கு வந்த அனைவருக்கும் மொய்க்கவர் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாம்தான் மணமக்களுக்கு மொய்ப்பணம் வைப்போம். ஆனால் இங்கு மணமக்கள் விருந்தினர்களுக்கு மொய்ப்பணம் வைத்துள்ளனர். ஒவ்வொரு விருந்தினருக்கும் ரூ.66,000 ரொக்கமாக சிவப்பு கவரில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மேசையிலும் வைக்கப்பட்ட இந்த கவர்களை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளலாமாம். இந்த வீடியோ தற்போது வரை 6.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.