பூஜைக்கு அடுத்த நாளே சர்ச்சையில் 'LIC' - விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடரப்போவதாக எஸ்.எஸ்.குமரன் எச்சரிக்கை!
’LIC என்ற தலைப்பை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்த திரைப்படம் சில பிரச்னைகளால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் லலித் குமாரின், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு வைத்த பெயரை ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
"விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு LIC என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் (suma pictures) இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.
ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.
இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் குறிப்பிட்டுள்ளார்.