Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான்” - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!

08:53 PM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

“அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய போலீசார் பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் ‘என்கவுண்ட்டரில்’ போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனிடையே மற்ற 10 கொலையாளிகளும், போலீஸ் காவல் முடிந்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடையதாக தேடப்படும் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலை தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை போலீசார் நேற்று (ஜூலை 19) கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் எழும்பூர் பகுதியில் இன்று (ஜூலை 20) பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அரசியல் கட்சி தொண்டர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பேசிய பா.ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது. காசு கொடுத்து இங்கு இருப்பவர்கள் யாரையும் கூட்டி வரவில்லை. திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

காவல்துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளன. சென்னையை பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங்கை மீறி எதுவும் நடக்காது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளார்கள். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல் உடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை ஏற்படும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர் இந்து மதத்திற்கு எதிராக போராடியவர். பௌத்த மதத்தை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர். அவர் பௌத்தத்திற்கு மாறிய பிறகு, அவருடன் அதிகமான நபர்களை வைப்பதை தவிர்த்தார். இந்த சூழலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் எப்படி அமைச்சர்கள் ஆனார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் பதவி கிடைத்தது.

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை. நீங்கள் திமுக-வில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா? சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள்? குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை. எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாளுவோம். பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். அவரை ஒருபோதும் விட்டு விடமாட்டோம். அவருடன் தான் இருப்போம். பாஜகவிற்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். எங்கள் பின்னாள் வேறு ஒருவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  நான் திமுகவிற்கு எதிராக பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் எங்களுக்கு என்ன செய்தார்கள். எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் செய்வது தான் திட்டமா? ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட வேண்டும். சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை.

ரிசர்வேஷன் மூலம் எம்பி, எம்எல்ஏ ஆனவர்கள் எங்கள் பிரச்னையை ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள். மற்ற ஜாதி பிரச்னைகளும், தலித் ஜாதி பிரச்னைகளும் வேறு வேறு. இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். உயர்சாதி அடக்கு முறையும் எஸ்சி, எஸ்டி அடக்கு முறையும் வேறு வேறு” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
ArmstrongBSPChennaiDMKNews7Tamilnews7TamilUpdatesPa. Ranjith
Advertisement
Next Article