"அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்" - இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதமாகும். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வர்.
8வது மாதமான மாதமான ஷஃபான் மாதம் பிப்.28ம் தேதி நிறைவு பெற்றது. இதனையடுத்து ரமலானுக்காக தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து மார்ச். 2 முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கி இன்றோடு 3வது நோன்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அதிகாலையிலேய இஸ்லாமியர்கள் உணவை உட்கொண்டு நோன்பை தொடங்கினர். மேலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் நலத் திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , வக்பு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்று நோன்பு திறந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..
“ அனைவருக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள். நாம் ரமலான் நோன்பு வாழ்த்து சொல்வது சிலருக்கு கோபம் வருகிறது. ரமலான் நோன்பு சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் ஆயிரம் முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம். சிறுபான்மை மக்களிடையே பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றது நம்முடைய திராவிட மாடல் அரசு. கன்னியமிகு காயிதே மில்லத்தும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.
மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. சிஏஏ , பொதுசிவில் சட்டம், வக்பு மசோதா என வருடா வருடம் சிறுபான்மை மக்களுக்கு ஏதோ ஒரு அறிவிப்பை வெளியிட்டு அவர்களை மத்திய அரசு கஷ்டபடுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து திட்டங்களை உறுதியாக எதிர்ப்பது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுதான்.
இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் தங்கள் சொந்த வீடு போல இருக்கும் மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடுதான். சிறுபான்மை மக்களின் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய பல திட்டங்களை திமுக தலைமையிலான அரசுதான் அமல்படுத்தியது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.