“பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” - சீமான் பரபரப்பு பேட்டி!
திருப்பூரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன?. வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்? ஆனால், அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல.
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது. நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயை தரக் கூடாது உடனடியாக அமைச்சரவையையும், சட்டசபையையும் கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும்.
இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். இதுபோன்று தீர்மானங்களை போடாமல் தமிழ்நாட்டில் புலம்பி கொண்டு இருக்கின்றனர். இதுபோன்று தீர்மானம் போட்டால் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைக்காக நிற்கும்” என்று தெரிவித்தார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு, திமுக, காங்கிரஸ், தவெக, சிபிஐஎம், உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.