“கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அது தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும்” - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை
தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால், அது வருகின்ற தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்பு பணிக்கு குழு அமைக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்தும், தொடர் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் முன்னணி நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 17 பேர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியருடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், 456 நாட்களுக்கும் மேலாக தாங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக தெரிவித்தனர்.
நாளை மதியம் நீர்நிலைகள் பாதுகாப்பு ஆய்வு ஒருங்கிணைப்பு தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகம் கூறியதாக எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு...!
மேலும், தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை எனில், வரும் தேர்தலில் அது பாதிப்பை எற்படுத்தும் என தமிழ்நாடு அரசிடம் கூறும்படி மாவட்ட ஆட்சியரிடம்
தெரிவித்ததாகவும் எதிர்ப்புக் குழுவினர் கூறினர்.