Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

10:01 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் எதற்கு? என பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக,  பாமக இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இட ஒதுக்கீடு கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழுமனது உண்டு. மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் எடுத்து புள்ளி விவரங்கள் கொடுத்தால் அடுத்த ஆறு மாதங்களில் இட ஒதுக்கீடு கொடுத்த சட்டத்தை இயற்றி விடுவோம். அதற்கு தோழமை கட்சியான பாஜகவிற்கு பாமக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அமைச்சர் ரகுபதி இன்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு மத்திய அரசை பாமகதான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 

சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாமக விரும்பினால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி, கூட்டணி கட்சியான பாஜகவிடம், பாமகதான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் இயலாமை தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக 2008-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது,  மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் திமுக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த இரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்யமுடியா திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

பீகார், கர்நாடகம், ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை. அந்த அரசுகளே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் ரகுபதி தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி, மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து திமுக தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார். 

Tags :
BJPCaste Wise CensusDMKNarendra modiPMKRamadossRegupathy
Advertisement
Next Article