“தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுமென்றால் 3-ஆவது முறையாக மோடி ஆட்சிக்கு வரவேண்டும்!” - ஜி.கே.வாசன் பேச்சு!
“தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுமென்றால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டார். ’
பரப்புரையில் ஈடுபட்ட போது ஜிகே வாசன் பேசியதாவது:
“வடசென்னை ஒரு முக்கியமான தொகுதி. பட்டியலின மக்கள் மற்றும் மீனவர்கள் அதிகம்
வாழும் தொகுதி. இந்த தொகுதி சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு இடம் மாற்றம் செய்யாமலே இருக்கிறது. கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்
விரிவாக்கப்படவில்லை. வேலைவாய்ப்பை இங்கே உருவாக்கித் தருகிறேன் என்று இளைஞர்களை, ஆளுகின்ற ஆட்சியாளர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காசிமேடு மீன் துறைமுகத்திற்கு உயர் கோபுர மின்விளக்குகள் முறையாக போடப்படாமல் இருக்கிறது.
பல்வேறு பிரச்சனைகளை கொண்ட தொகுதியாக வடசென்னை இருப்பதற்கு திமுக தான் காரணம். தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டுமென்றால் பிரதமர் மோடி ஆட்சி மீண்டும்
அவசியம் வேண்டும். அவசரமாக வேண்டும். சொந்த வீடு கனவை நினைவாக்கிய அரசு பிரதமர் மோடியின் அரசு. தொழில்களைக் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நினைக்க கூடிய அரசு பாஜக அரசு தான்.
மத்திய அரசினுடைய சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்க முடியும்.
உயர்வு, என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வரி உயர்வு என்பது திமுக அரசால்
விண்ணைத் தொட்டு கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. தமிழ் என்று கூறிக் கொண்டிருக்கிற இந்த அரசு தமிழர் திருநாள் பொங்கல் பரிசு தொகுப்பிலேயே முறைகேடு செய்த அரசு என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி திமுக அரசு மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது.
கல்வியிலே அரசியலை புகுத்தி, வாக்கு வங்கிக்காக மாணவருடைய படிப்பை கெடுக்க நினைக்கின்ற அரசு, இந்த அரசு என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத அரசு என்றால் இந்தியாவில் முதல் படியிலே அமரக்கூடிய தகுதி பெற்றது திமுக. அதிலே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுகாதார பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் இந்த அரசால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று இன்னும் மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் தருவதிலும் பாகுபாடு, பாரபட்சம். அவரது கட்சி உறுப்பினருக்கு பெரும்பாலும் அந்த ஆயிரம் ரூபாய் போகின்றது என்பதுதான் உண்மை நிலை. மேலும் மத்திய அரசோடு ஒத்த கருத்துடைய பாராளுமன்ற உறுப்பினரை தயவு கூர்ந்து
தேர்ந்தெடுங்கள். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் மட்டுமே வரும் நாட்களிலே இது போன்ற மிக முக்கியமான தொகுதிகள் வளரும், சிறக்கும், உயரும் என்பதில் மாற்றுக் கருத்து
கிடையாது. மகளிருக்கு இலவச பேருந்து என கூறி அதனை ஓசி பேருந்து என கிண்டலடிக்கும் அரசுதான் திமுக அரசு” என அவர் கூறினார்.