"வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்" - திருமாவளவன் பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை பகுதியில் இயங்கி வரும் தாய்த்தமிழ் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கோறுகிறார்கள்.
சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் மக்கள் அவையிலும், மாநிலங்கள் அவையிலும் இந்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்கு தயாராக இல்லை அதனால் இரு அவைகளும் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிற மாநிலங்களிலும் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த தீவிர வாக்களர் திருத்த நடவடிக்கை தமிழக வாக்காளர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சூழல் உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து தமிழகத்தில் வேலை செய்து வருகின்ற பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்காளர் உள்ளனர்.
அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. ஆகவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எதிர்பார்க்கும் அதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஒரு கட்சி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான கட்சி, எனவே இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் ஸ்டாலின் இதனை எதிர்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழ்நாட்டிலும் புதிய வாக்காளர் சேர்க்கிறோம் என்கிற பெயரில் வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக தமிழகத்தில் சேர்ந்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப் போகும். எனவே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் துணிந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.