"12th fail திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நான் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன்" - சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
'12th fail' திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நானும் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவர்கள் 298 பேருக்கு பொன்னேரி
சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதனுடன் அறிவியல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:
"12th fail என்ற ஹிந்தி திரைப்படத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த முறை வந்து பள்ளியில் கேட்பேன் நீங்கள் படத்தை பார்த்தீர்களா என சொல்ல வேண்டும். இது போன்ற படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நானும் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன். பல போட்டி தேர்வுகளை நான் எழுதியுள்ளேன். நவீன தொழில்நுட்பம் உங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை உடனடியாக
பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.