"ஜல்லிக்கட்டு சம்பந்தமாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்” -நடிகர் சூரி
“விடுதலை 2-க்கு பின் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நமது மதுரையிலேயே நடிப்பேன்” என நடிகர் சூரி தெரிவித்தார்.
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.
இந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில்ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது.
கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் விளையாட 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் வந்துள்ளனர். நடிகர் அருண் விஜய் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார். மிஷன் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் மேடையில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார். பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நம்ம ஊர் மதுரை. நான் பிறந்த ஊர். உலகத்திலேயே மிக முக்கியமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளேன். காளையா? மாடுபிடி வீரனா? என போட்டி நடைபெறுகிறது. விடுதலை 2க்கு பின் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நமது மதுரையிலேயே நடிப்பேன்” என நடிகர் சூரி தெரிவித்தார்.