“நான் ஆட்சிக்கு வந்தால்" - கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இத்தகைய சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கவின் கொலை செய்யப்பட்டதை ‘சாதி’யின் கொலை என்றும், திருப்புவனத்தில் ‘சட்டம்’ கொலை செய்யப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “நான் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற ஆணவக்கொலையில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அவர்களின் குடும்பத்திற்குக் கூட அரசுச் சலுகைகள் கிடைக்காது,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆணவக்கொலை செய்தவரின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களும் செல்லாததாக அறிவிக்கப்படும். அவரது குடும்பத்தினரின் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் வாக்காளர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
கொலை செய்தவரின் தலைமுறைக்கு எந்த ஒரு அரசு வேலையும் கிடைக்காது.என கூறினார். மழை சாதி பார்த்து பெய்வதில்லை. இந்த சாதிகாரன் தான் நடக்க வேண்டும் என எதுவும் கிடையாது, சாதி பார்த்து பிணத்தை புதைக்கும் நிலை தமிழ்நாட்டில் தான் உள்ளது என தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளன என்பதைக் காட்டுவதாகவும், இந்தச் சமூகப் பிரச்சனைகளை வேரறுக்க வலுவான சட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.