"திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார். ஏன் பதறுகிறீர்கள்? என்ன தவறு செய்தீர்கள்? வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?
நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்? திமுகவின் அரசியல் தில்லு முல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட, அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.