“‘DeepSeek’ செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” - டெல்லி உயர் நீதிமன்றம்!
சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனம் தயாரித்த “DeepSeek” செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த பிப்ரவரி 12ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை இணைக்க வேண்டும் என உயர் நீதிமனறம் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதி ஒத்திவைத்தது.
இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் இன்று முறையிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "DeepSeek" செயலி பயனாளர்களுக்கு ஆபத்தை தரக்கூடும் என்றால், அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மாறாக அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியதோடு, அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்து வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.