‘காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பல்ல’ - டெல்லி உயர்நீதிமன்றம்!
காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பாக முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் தந்தை வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தனது மகன் தற்கொலைக்கு அவரின் காதலியும், காதலியின் நண்பரும்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணும், தனது மகனும் நெருக்கமாக இருந்ததாகவும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், காதல் தோல்வியுற்றதால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், “காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொண்டாலோ, தேர்வில் தோல்வியால் மாணவன் தற்கொலை செய்து கொண்டாலோ, மனுதாரர் தன் வழக்கின் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாலோ காதலியோ, தேர்வு நடத்துபவரோ, வழக்கறிஞரோ பொறுப்பாக முடியாது.
பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் எடுக்கும் தவறான முடிவுக்கு, மற்றொருவர்தான் காரணம் என குற்றம் சாட்ட முடியாது என நீதிபதி அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இளைஞரின் அறையில் எடுக்கப்பட்ட கடிதத்தில் இந்த இருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இவர்களின் அச்சுறுத்தலால் இறந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இந்த கடிதம் இறந்தவரின் வேதனை நிலையை மட்டுமே எடுத்து கூறுகிறது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கும், அவரின் நண்பருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களை காவலில் வைக்க அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இருவரிடமும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்துள்ளது.
கடைசியாக அந்தப் பெண்ணையும், அவரது நண்பரையும் இறந்தவர் ஒன்றாகப் பார்த்துள்ளார். அப்போது, ஏன் இருவரும் சந்தித்து கொள்கிறீர்கள் எனக் கேட்டபோது அவருக்கும், பெண் நண்பருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாத்தின் போது இறந்தவருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரின் காரை அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் கற்களால் அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.