ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல் - ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.
தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் 177ரன்கள் இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது
ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வை ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு காரணமாக அமைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 222 புள்ளிகளுடன்முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார் .