ஐசிசி தரவரிசை - கடும் சரிவைக் கண்ட ரோகித், கோலி... முதலிடத்தை தக்கவைத்த பும்ரா!
ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 40வது இடத்திலும், விராட் கோலி 24வது இடத்திலும் உள்ளனர்.
ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்திலும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் நீடிக்கிறார். 3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார். டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்நிலையில் இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகின்றனர். விராட் கோலி 633 புள்ளிகளுடன் 24-வது இடத்திலும், ரோகித் சர்மா 560 புள்ளிகளுடன் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார்.
தற்போது கூடுதலாக 3 புள்ளிகளை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் பும்ரா. இதன் மூலம் உலக அரங்கில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றவர்களின் பட்டியலில் 17-வது இடத்தில் உள்ளார்.