அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஐசிசி-க்கு ரூ.167 கோடி இழப்பு?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
9-வது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2 முதல் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதல் நியூயார்க் நகரில் அரங்கேறியது.
அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக பிரத்யேகமாகவும், அவசரம் அவசரமாகவும் அங்கு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. செயற்கை புல்வெளி மூலம் அமைக்கப்பட்ட இந்த மைதானங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கு இருந்த ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர். இதனால், முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆடுகளம் பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி-க்கு 20 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.167 கோடி இருக்கும்.
நாளை வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறும் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டில் இந்த இழப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதே மாநாட்டில் மற்றொரு விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. அதாவது, பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவை ஐ.சி.சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தக் கூட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.