“IC-814 - The Kandahar Hijack-ல் கடத்தல்காரர்களின் பெயர்கள் உண்மையானவையே” - கடத்தப்பட்ட விமானத்தில் பயணித்த பெண் பேட்டி!
`IC 814 காந்தஹார் ஹைஜாக்' தொடரில் கடத்தல்காரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் உண்மையானது தான் என 1999 இல் கடத்தப்பட்ட IC-814 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் விஜய் வர்மா நடிப்பில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆக.29ஆம் தேதி வெளியான வெப்சீரீஸ் `IC 814 காந்தஹார் ஹைஜாக்'. இத்தொடர் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களிலும், #BoycottBollywood, #BoycottNetflix போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ஐ தீவிரவாதிகள் சிலர் கடத்தினர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இத் தொடரில், கடத்தல்காரர்களில் சிலரின் பெயரை இந்து பெயராக வைத்திருப்பதே விவாதப்பொருளாக மாற காரணம்.
இந்நிலையில் கடத்தப்பட்ட IC-814 விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவரான பூஜா கட்டாரியா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“நாங்கள் நேபாளத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, விமானம் கடத்தப்பட்டது. விமானத்தில் 176 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட அரை மணி நேரத்தில் விமானம் கடத்தப்பட்டது. விமானத்தில் 5 கடத்தல்காரர்கள் இருந்தனர். அனைவரும் பயந்துவிட்டோம். நாங்கள் எந்த இடத்தில் இருந்தோம் என எதுப்பற்றியும் எங்களுக்கு தெரியாது. ஒரு நாளில் ஒரு சிறிய ஆப்பிளைத் தவிர, எங்களுக்கு எதுவும் சாப்பிடக் கொடுக்கப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த தொடரினால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. இந்தத் தொடர் ஒரு உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள கடத்தல்காரர்களின் பெயர்களும் உண்மையானதுதான். போலா, சங்கர் என்பது அவர்களின் பெயர்கள். அவை குறியீட்டுப் பெயர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் அப்படித் தான் அழைத்தார்கள். நாங்கள் அவற்றைக் கேட்டோம்” என கடத்தப்பட்ட விமானத்தில் பயணித்த பூஜா கட்டாரியா தெரிவித்துள்ளார்.