'IC 814' Hijack வெப் சீரிஸ் விவகாரம் - மத்திய அரசிடம் விளக்கம் அளித்தது #Netflix!
ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் தொடர்பாக மத்திய அரசு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கந்தஹார் விமானக் கடத்தல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொத்தம் 6 எபிசோடுகளை கொண்டதாக இந்த சீசன் அமைந்துள்ளது.
1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த கடத்தல் 8 நாட்கள் நீடித்தது. பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த நிலையில் கந்தஹார் விமான கடத்தல் தொடர்பான இந்த வெப் சீரீஸில் அப்போதைய அரசின் தயார் நிலை குறைபாடு, நிர்வாகத் துறையில் ஏற்பட்ட பல்வேறு தவறுகள் மற்றும் பயணிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தை ஆகியவை முக்கியமாக இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன. வெளியுறவுத்துறை உயரதிகாரிகளில் ஒருவராக, வரும் அரவிந்த் சாமி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
'IC 814' இணைய தொடரில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் பெயர்களை மாற்றியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் Netflix இந்தியாவின் உள்ளடக்கத் தலைவருக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில் நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் கந்தஹார் தொடரின் உள்ளடகத்தினை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் காலங்களின் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக தங்களது உள்ளடங்களை சரிபார்க்கப்படும் என மத்திய அரசிடம் உறுதி அளித்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.