For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை சண்டையிட மறுத்தது ஏன்? நடந்தது என்ன?

09:51 PM Aug 03, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக்  இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை சண்டையிட மறுத்தது ஏன்  நடந்தது என்ன
Advertisement

தனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகியதாக இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்செலா காரினி தெரிவித்தார்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் - இத்தாலியின் ஏஞ்செலா காரினி மோதினர். மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார். அத்துடன், களத்திலேயே அவர் முழங்காலிட்டு அழுதார். முடிவில், கெலிஃபுடன் கைகுலுக்கவும் அவர் மறுத்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஏஞ்செலா காரினி?

இத்தாலியைச் சேர்ந்த 25 வயதாகும் ஏஞ்செலா காரினி, 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை வீராங்கனை. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து காரினி வெளியேறினார். ஏஞ்செலா காரினிக்கு அவரது தந்தை வைத்த செல்லப் பெயர் ”டைகர்”.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்து வெளியேறிய கொஞ்ச நாட்களிலேயே காரினியின் அப்பா உயிரிழந்துவிட்டார். தந்தையும், தனது பயிற்சியாளருமான அவரை கௌரவப்படுத்தும் விதமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு ஏஞ்செலா காரினி குத்துச்சண்டை மேடையேறினார். அவரது கனவு 46 விநாடிகளில் தகர்ந்தது.

குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதற்கு முன்னதாக துப்பாக்கி சுடுதலில் (க்ளே பீஜியன் சூட்டிங்) இத்தாலியின் சாம்பியனாக வலம் வந்துள்ளார் காரினி. அவரது சகோதரரும் துப்பாக்கி சுடுதல் வீரராக இருந்துள்ளார். சகோதரர் துப்பாக்கி சுடுதல் போட்டியை கைவிட்டு குத்துச்சண்டையில் தனது ஆர்வத்தை திருப்ப, ஏஞ்செலா காரினியும் குத்துச்சண்டையில் ஆர்வமானார். அப்பாவும், சகோதரரும் தனக்குக் குத்துச்சண்டை கற்றுக் கொடுத்ததாகவும், நான் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் காரினி கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் :“இறுதிக்கட்டத்தில் வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள்.. இன்னும் 206 பேரை காணவில்லை..” - பினராயி விஜயன் பேட்டி!

இமென் கெலிஃபுக்கு எதிரான போட்டியிலிருந்து ஏஞ்செலா காரினி விலக காரணம் என்ன?

பாரிஸ் ஒலிம்பிக்கின் மகளிர் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃபுடன் மோதிய ஏஞ்செலா காரினி, போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விலகுவதாக அறிவித்தார். ஏஞ்செலா காரினியின் இந்த செயல் பெரும் பேசுபொருளானது. இமென் கெலிஃபுக்கு எதிரான குத்துச்சண்டை போட்டி தொடங்கிய சில விநாடிகளிலேயே போட்டியிலிருந்து விலகுவதாக ஏஞ்ஜெலா காரினி தெரிவித்தார். முதல் இரண்டு மூன்று குத்துகளிலேயே அவருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது.

போட்டியிலிருந்து விலகுவது குறித்து பேசிய ஏஞ்செலா காரினி கூறியதாவது ;

"எனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னால் இனி போட்டியைத் தொடர முடியாது . எனது குடும்பத்தை நினைத்துப் பார்த்தேன். அரங்கத்தில் அமர்ந்திருந்த எனது சகோதரரைப் பார்த்தேன். அதன் பிறகு போட்டியிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்தேன். இதுபோன்ற சக்திவாய்ந்த குத்துகளை  நான் ஒருபோதும் வாங்கியதில்லை. போட்டியிலிருந்து விலகுவது என்பது முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த சர்ச்சைகள் அனைத்தும் எனக்கு சோகத்தை ஏற்படுத்துகின்றன. இமென் கெலிஃபை நினைத்தும் நான் வருத்தப்படுகிறேன்.

இமென் கெலிஃப் குத்துச்சண்டையில் போட்டியிடலாம் என சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு கூறியிருந்தால், அவர்களின் முடிவை மதிக்கிறேன்.இமென் கெலிஃபுக்குக் கை குலுக்காமல் சென்றது வேண்டுமென்று செய்த செயல் கிடையாது. என்னுடைய அந்த செயலுக்காக இமென் கெலிஃபிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு தகர்ந்துவிட்டதால் நான் கோபத்தில் இருந்தேன். கெலிஃபுக்கு எதிராக நடக்க வேண்டும் என எதையும் செய்யவில்லை. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால், ஆரத் தழுவி கட்டியணைப்பேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement