"தேர்வில் வென்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்" - பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வினை 86 தனியார் பள்ளியை சேர்ந்த 6 ஆயிரத்து 992 மாணவர்களும், 362 தனி தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட…
— TVK Vijay (@TVKVijayHQ) March 3, 2025
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.