“அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்” - நடிகர் ரஜினிகாந்த்!
வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் அரசியல் குறித்த கேள்விகளை எழுப்பியபோது, அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர், லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியானது.
படப்பிடிப்பு 75% நிறைவடைந்த நிலையில் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம்
சென்னை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.