“நான் உயிருடன் இருக்கும் வரை CAA-வை அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி பேச்சு!
நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் சிஏஏ செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட். இதையடுத்து இந்த சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
இதனிடையே மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். மக்களவை அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக பாஜக மீண்டும் சிஏஏ விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் அதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டைகளை வழங்கி, பொறியில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். அத்தகைய அட்டைகளை ஏற்று கொள்ள வேண்டாம்.” என தெரிவித்தார்.