Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன்" - மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி

02:16 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன் என நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Advertisement

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதத்தை ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று (ஆக. 4) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நெல்லை மாநகராட்சிக்கு திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இவர் நெல்லை மாமன்றத்தில் 3வது முறையாக திமுக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்டவர்.

நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில், நெல்லை மாநகராட்சி புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (ஆக. 5) நடைபெற்றது. சரியாக 12 மணியளவில் தேர்தல் தொடங்கியது. தொடர்ந்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொருவராக தங்களது வாக்கினை செலுத்தினர்.

இதில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகளை பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றார்.  நெல்லை மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், இதில் 54 பேர் வருகை தந்த நிலையில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து 30 வாக்குகள் பெற்ற கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார்.  தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும்  அவரிடம் ஆணையாளர் வழங்கினார்.

இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன். எனக்கு வாக்காளிக்காத மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய சகோதரர்கள் தான் என எண்ணி 55 வார்டுகளும் என்னுடைய வார்டாக நினைத்து நான் பணியாற்றுவேன். சென்னை மாநகராட்சி போன்று நெல்லை மாநகராட்சியை மாற்றுவேன். 45 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வந்த சாதாரண தொண்டனை நெல்லை மாநகராட்சி மேயராக ஆக்கியுள்ளனர். சுத்தமான குடிநீர் 55 வார்டுகளுக்கு 24 மணி நேரம் கிடைக்கும் வகையிலும், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவேன்."

இவ்வாறு நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் கூறினார்.

Tags :
DMKmayor electionNellaiTirunelveli
Advertisement
Next Article