”2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன்” - ராமதாஸ் பேச்சு!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக கோவலன் – கண்ணகி வாழ்க்கை வரலாறு குறித்த வில்லுபாட்டு மற்றும் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியால் படித்து நிறைவேற்றப்பட்டது. அதன் பின் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். அவர் பேசியது,
”மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என தேசிய விநாயகம் பிள்ளை சொல்லியிருக்கிறார்.அந்த வகையில் இந்த மாநாட்டில் பெண்கள் பங்கேற்றள்ளனர்.நல்ல நோக்கத்தோடு பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு,சம உரிமை ஆகியவற்றிற்காக இந்த மாநாடு நடக்கிறது.என்னுடைய நண்பர் கலைஞர் கருணாநிதி 20% ஒதுக்கீடு அளித்தார். தற்போது, அண்டை மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் இன்னும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்? உடனடியாக 10.5% உள் ஒதுக்கீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. மதுவை, கஞ்சா வை விற்காமல் கண்காணித்து ஒழிக்க வேண்டும். போராட வேண்டும் என்னை கூப்பிட்டாலும் சின்ன போராட்டம் நடத்தினாலும் வருவேன்.தமிழக முதல்வர் என்னிடம் 3 மாசம் ஆட்சியை கொடுங்கள் என்பது கேட்பது சரியாக இருக்காது. 10 அதிகாரி களை தாருங்கள் கஞ்சாவை மது தீமைகள ஒழித்துக் காட்டுவோம். 2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். நான் சொல்வதுதான் நடக்கும் யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காதீர்கள். மாநாட்டிற்கு வருகை தந்தவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கவனமாக செல்ல வேண்டும்” என்று முடித்தார்.