"உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்" - முதலமைச்சர் #MKStalin பதிவு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் கடந்த ஜன.22ம் தேதி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து பேசினர். அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! #Tungsten pic.twitter.com/OV1db5dXGc
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
இந்த சூழலில், அரிட்டாப்பட்டி பல்லியிர் பாதுகாப்பு மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்க திட்டம் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மதுரை மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு விவசாயிகள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 3 மாதகால மதுரை மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மத்திய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நாளை அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி செல்லவுள்ளார்.
நாளை காலை சென்னையில் குடியரசு தின நிகழ்வுகளை முடித்துக்கொண்டு விமானம் மூலமாக மதுரை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிட்டாபட்டி சென்று, இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அரிட்டாபட்டி மக்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.