“தூய்மைப் பணியாளர்களுடன் என்றும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” - முதலமைச்சர் #MKStalin!
தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் துணைநிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் நகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி கள ஆய்வுகளை பார்வையிட்டார். வடசென்னை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள யானைக்கவுனி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். யானைக்கவுனி மேம்பாலம் செல்லக்கூடிய பகுதியில் அங்குள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு பேசின்பிரிட்ஜ் மேம்பாலம், புளியந்தோப்பு பகுதிகளை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களிடமும் பேசினார். தொடர்ந்து அருகில் இருந்த கடைக்கு அவர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு டீயும், பிஸ்கட்டும் வாங்கி கொடுத்து, அவர்களோடு அமர்ந்து குடித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம், காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள்; மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்!
அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.