“அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுவதை வரவேற்கிறேன்” - சீமான்!
“இன்றைய தலைமுறையினர் அம்பேத்கரை தெரிந்து கொள்ளும் வகையில், தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் நூலை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“புறணிகளுக்கு நாதக பதில் அளிக்காது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்யும் தவறால், நேர்மையாகவும், கண்ணியமாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்களுக்கு சேவை செய்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் உருவாகும். மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அரசும் உறுதி தன்மை இல்லாமல் உள்ளது.
பள்ளிகளில் மேற்கூரைகள் இடிந்து விடும் அவல நிலை உள்ளது. அதேபோல் அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளது. இந்த தரத்தில்தான் தற்போதைய தமிழக அரசு உள்ளது. ரூ.2000 நிவாரணத் தொகையை வைத்து விவசாயிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஒன்றும் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை. எந்த பாதிப்பு வந்தாலும் ரூ.500, ரூ.1000 கொடுத்து சரி செய்துவிடலாம் என அரசு நம்புகிறது. மகளிர் உதவித்தொகை, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என தேர்தலை சந்திக்கும் வகையில் ஆட்சியை நடத்தினால், மக்கள் என்ன செய்வார்கள்? கேட்டால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என இந்த அரசு கூறி வருகிறது.
இதெல்லாம் தொடரக்கூடாது என்றுதான் கூட்டணி இல்லாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து நிற்கிறோம். வரும் தேர்தலிலும் தனித்துதான் நிற்போம். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு முதலில் என்னையும் அழைத்தார்கள். நூலை திருமாவளவன் வெளியிட, நான் பெறுவது என்றால் சரியாக இருக்கும். இன்றைய தலைமுறையினர் அம்பேத்கரை தெரிந்து கொள்ளும் வகையில், தவெக தலைவர் விஜய் நூலை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்.
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத செக்ஷன் 17 பிரச்சனையால் அங்குள்ள மக்களுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேப்போல் தேயிலைக்கு 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். அது நியாயமான கோரிக்கை தான். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி பலமுறை போராடியது. ஆனால் மின் இணைப்புகள் இல்லாமல் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கிடையே தேயிலை விவசாயிகள் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவது எவ்வளவு சிரமம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை.
இது குறித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களிடையே கேட்க வேண்டும். அதற்கு பதிலும் இவர்கள் தான் அளிக்க வேண்டும். இன்னும் ஆறு மாதத்திற்குப் பிறகு வரும் தேர்தலின் போது இதே வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிப்பார்கள். அதை நீங்கள் கேட்கலாம். வாக்குறுதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அதன் எண்கள் மட்டுமே மாறும். மக்களின் பிரச்சினைகளை அரசு கையில் எடுக்காத போது, அதிகாரத்தை கையில் எடுக்காத போது, மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை.
மின் இணைப்பு இல்லை என்றபோது வரும் கோபம், தேர்தலின் போது 500, 1000 ரூபாய் கொடுக்கும்போது குறைந்து விடக்கூடாது. துன்பத்தை ஆட்சியாளர்கள் கொடுத்தாலும், தேர்தலின் போது அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து விடுகிறார்கள். அண்ணல் அம்பேத்கர் திரும்பத் திரும்ப கூறியது போல் இழந்துவிட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெற முடியாது. போராடிதான் பெற்றாக வேண்டும். இது புலம்பி கொண்டிருக்கின்ற காலமல்ல. போராடி பெற வேண்டிய காலம் என்றது போல், ஒன்று சேர்ந்து, கற்பித்து, புரட்சி செய்ய வேண்டும்.
நாங்கள் தேர்தலில் எப்போதும் தனித்து தான் போட்டியிடுகிறோம். தவெக தலைவர் விஜய் தனித்து போட்டியிடுகிறாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்க்கவில்லை என பிரச்னைகள் வருகிறது. அவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்றால், அவரைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். உதவுகின்ற எண்ணம் இருந்தாலே அதனை எந்த வழியில் செய்தாலும் பாராட்ட வேண்டும்” என தெரிவித்தார்.