”டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை என வருத்தமாக இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது”- பாடகி பி.சுசீலா பேட்டி
”டாக்டர் பட்டம் ஒன்று தான் கிடைக்கவில்லை என நீண்ட நாட்களாக வருத்தமாக
இருந்தேன், இன்று அதுவும் கிடைத்து விட்டது” என பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா
உற்சாகமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் .கலைப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.21) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதன் பின்னர் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இத பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பின்னணி பாடகி பி.சுசீலா தெரிவித்ததாவது..
“ கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும் நான் விருது வாங்கினேன். இப்போது அவரது மகன் கையில் இருந்து எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. பத்ம பூஷன் விருது எனக்கு கிடைக்க பரிந்துரை செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் . நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என என முதலமைச்சர் அவருடைய தந்தை கருணாநியை நினைத்து பாடி இருக்கிறார். முதலமைச்சர் பாடியது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. அவர் இசைக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வாய்ப்பு அளித்து தமிழ் பெண்ணாக என்னை ஏற்றுக்கொண்டனர். என்னுடைய பெருமை எல்லாம் என் தந்தையும் தாயையும் சேரும். இதுவரை டாக்டர் பட்டம் ஒன்று தான் கிடைக்கவில்லை என நீண்ட நாட்களாக வருத்தமாக இருந்தேன். தற்போது அதுவும் வந்துவிட்டது என மகிழ்ச்சி “ என பி.சுசீலா தெரிவித்தார்.