தானியங்கி ரோபோக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன்.. - ஆனந்த் மகிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு..
ஒரு ரோபோ ஆற்றில் குப்பைகளை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, யாரேனும் இதை தயாரிக்க விரும்பினால் அதற்கு முதலீடு செய்ய தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நான்காவது தொழிற்புரட்சி கருதப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியான ரோபோக்களின் வளர்ச்சி என்பது இக்காலகட்டத்தில் மிக அதிகமாகும். ரோபோக்களின் வளர்ச்சி வரவேற்க தக்கதாக இருந்தாலும், அதன் மறுபக்கம் பல விளைவுகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ரோபோக்களின் வளர்ச்சி, மனிதர்களின் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்பது முக்கியமான ஒன்று.
இந்நிலையில், ரோபோ ஒன்று ஆற்றில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. அந்த வீடியோவை பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
”தானியங்கி ரோபோ ஒன்று ஆறுகளை சுத்தம் செய்கிறது. இதைப் பார்த்தால் சீனாவின் தயாரிப்பு போன்று தெரிகிறது. இதன் தேவை நமக்கு அவசியம். நாம் இதை இங்கே, இப்போதே தொடங்க வேண்டும். யாரேனும் இதை செய்ய தாயாராக இருந்தால், நான் முதலீடு செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.