“இமாச்சலப் பிரதேசத்துக்கு போக வேண்டாம் என கூறினேன்”-சைதை துரைசாமியின் உருக்கமான பேச்சு!
“இமாச்சலப் பிரதேசத்துக்கு போக வேண்டாம் என கூறினேன்” என வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு சைதை துரைசாமி உருக்கமாகப் பேட்டி அளித்தார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி அவர் சென்ற கார் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் இறந்தார். மேலும், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து காணாமல் போன வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரது உடல் நேற்று மீட்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரபபட்டது.
அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. iதை தொடர்ந்து வெற்றி துரைசாமி உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு உருக்கமாகப் பேட்டி அளித்த சைதை துரைசாமி, “வெற்றி துரைசாமியை இமாச்சல பிரதேசத்துக்கு நான் போக வேண்டாம் என கூறினேன். ஆனால் இதுவே கடைசி முறை என்றார். ஆனால் இதுவே கடைசி பயணமாக அமைந்துள்ளது. என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையோடு நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பும் அக்கறையும் கொண்டு உங்கள் இரங்கலை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என உருக்கமாகப் பேசினார்.