"என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான்" - இயக்குனர் மிஷ்கின்
'டெவில்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின் "என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'சவரக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது 'டெவில்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு மிஷ்கின் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜன.25) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கின், ஆதித்யா, விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குனர் மிஷ்கின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தற்போது தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறேன். 25 ஆண்டுகால திரைவாழ்வில் விஜய் சேதுபதி போன்ற அசாதாரணமான நடிகரை பார்த்ததில்லை. அத்தனை அர்ப்பணிப்புடன் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவரது நடிப்பு மெருகேறிக்கொண்டே இருக்கிறது.
விஜய் சேதுபதிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தாணு என்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டார். பெரிய காஸ்ட் இந்த படத்தில் இருக்கிறது. 'அஞ்சாதே' படத்துக்கு பிறகு நான் வேகமாக எடுத்த படம் 'ட்ரெயின்' தான். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் காத்திருங்கள்.
ராமர் , அல்லா, ஏசு கிறிஸ்து, புத்தர், குருநானக் எல்லாமே மனசுக்குள்தான். கோயிலாகவும் கும்பிடலாம் மனதிற்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். ராமர் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். நிறைய கருத்துக்கள் சொல்வார்கள் அது எல்லாம் எனக்கு தெரியாது. அரசியல் கதைகள் சொல்வார்கள் அதுவும் எனக்கு தெரியாது.
இதையும் படியுங்கள்: நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்!!
ஒரு சினிமாக்காரனாக அரசியல் கருத்து சொல்லக்கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன். சினிமாவில் இருப்பவர்கள் அரசியல் சார்ந்து கருத்து சொல்வார்கள் என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான் என்று நினைக்கிறேன். என் சினிமாவில் என் கதை மாந்தர்கள் எல்லா காலத்திலும் இருக்கும் அரசியலை பேச ஆசைப்படுகிறேன்.
மனித அவலம், பிற மனிதர்களை அவன் எப்படி நேசிக்கத் தவறுகிறான். ஒரு குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும், மற்றவர்களுக்கு அன்பு எப்படி செலுத்தனும் என்பதைத்தான் எனது அரசியலாக பார்க்கிறேன். அதை எப்படி எழுதனும் என்று பார்க்கிறேன்.
சமகாலத்தில் நிகழும் அரசியலை நான் பேசக் கூடாது என்று நினைக்கிறேன். அவர் அவர்களுக்கு ஒரு வேலை இருக்கு. என்னுடைய கடமை நான் அரசியல் பேசும் இடம் என் ஓட்டு மட்டும்தான். ஒரு சினிமா கலைஞனாக இந்த முடிவு எடுத்துள்ளேன். நிறைய பேர் பேசுகிறார்கள் என்றால் அது அவர்களின் கருத்து சுதந்திரம்.
இதுகுறித்து நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் சார்ந்து ஒரு கருத்து சொன்னால் அது தவறாக ஆகிவிடும். அதுக்காக நான் பயப்படவில்லை ஒரு சினிமாக்காரனாக எனது அரசியல் எனது கதைகள் மூலம் வெளிய வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.