“நான் படித்ததால் என்னை சுற்றிய 50 பேரின் வாழ்க்கை மாறியது” - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
நான் ஒருவன் படித்ததால் என்னை சுற்றி இருக்கும் 50 பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. அது 100, 1000 என மாறுகிறது. அதனால் படிப்பு ரொம்ப முக்கியம் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிங்கப்பூர் சலூன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் - ஐசரி கணேஷ் தயாரித்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், கிஷான் தாஸ், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கே.ராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்ததாவது,
“சிங்கப்பூர் சலூன் படம் ரிலீஸ்க்கு ரெடியாகி விட்டது. எனக்கு பெரிய அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது. உடம்பு சரியில்லாத போதும் இந்த படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இன்றைக்கு கிஷன் தாஸ் & ரோபோ சங்கர் இருவரின் ஜோடியாக நடித்தவர்களும் வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடன் நடித்த ஹீரோயின் 2 பேரும் வரவில்லை. மீனாட்சி சௌத்ரி எனக்கு ஜோடியாக நடித்தவருக்கு வர நேரமில்லை. விஜய் சாருடன் ஜோடியாக நடிக்கிறார் என்றும், நான் கண் முன் பார்த்த ஜாவா சுந்தரேசன், மீனாட்சி சௌத்ரி தான்.
இயக்குநர் லோகேஷ் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணி கொடுத்தார். இந்த படத்தில் காசு எதுவும் வாங்காமல் பெரிய நடிகர் ஒருவர் நடித்து கொடுத்துள்ளார். சத்தமாக பேசி டயலாக் வைத்து நடிக்கும் நடிகனாக இருந்த பாலாஜியை வேறு விதமான கதைக்கு ஏற்ப மாற்றியவர் இயக்குநர் கோகுல் தான். அது அப்போது கஷ்டமாக இருந்தது. சலூன் செட்டுக்கு மட்டும் 1.5 கோடி செலவானது. அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கெஸ்ட்டாக வந்திருந்தேன். அந்த படத்தை தயாரித்த போனி கபூர் தான் நான் நடித்த வீட்ல விசேஷம் படத்தையும் தயாரித்தார். அதனால் நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொன்னு எடுத்திருக்கோம் என்று சொன்னேன். காரணம் இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் படம் பண்ணிருக்கோம். உதயநிதியும் பேசும் போது அதே தான் சொன்னார்.ஆனால் அந்த 20 செகன்ட் வீடியோ கிளிப்பை சமூக வலைத்தளங்களில் போட்டு என்னோட மனைவியும், அவருடைய மனைவியும் அக்கா, தங்கச்சி என்றும் ஆர்.ஜே.பாலாஜி உழைப்பால் உயர்ந்தவர் என்று பார்த்தால், அவனும் அரசியல் பின்புலத்தால் தான் உயர்ந்தான். அதனால் தான் சிங்கப்பூர் சலூன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்று கூறுகிறார்கள். அடப்பாவிகளா...
அந்த வீடியோவை 5 செகன்ட் கூட பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் வாங்கவில்லை. இன்றைக்கு ரெட் ஜெயன்ட் மார்க்கெட் லீடர். அவர்கள் நல்ல படங்களை தேடி வாங்குகிறார்கள். நான் அவருக்கு சகலபாடி இல்லை. நான் வானம்பாடி. ஒரு ஓரமாக பறக்கிறவன். நான் ஒருவன் படித்ததால் என்னை சுற்றி இருக்கும் 50 பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. அது 100, 1000 என மாறுகிறது. அதனால் படிப்பு ரொம்ப முக்கியம்.” என்று கூறினார்.