“நீ சிரிக்கும் போது நான் சிரிக்கிறேன்!” - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நெகிழ்ச்சியுடன் விடை பெற்ற கவுதம் கம்பீர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து அந்த அணியின் தலைமை ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடை பெற்றார்.
கவுதம் கம்பீர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இருந்த நிலையில், அந்த அணி அண்மையில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு பதிலாக கம்பீரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜூலை 9 ஆம் தேதி அறிவித்தது.
இதனை அடுத்து அடுத்து, கொல்கத்தா அணிக்கான தலைமை ஆலோசகர் பதவியை கவுதம் கம்பீர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு நன்றி சொல்லும் விதமாக, நெகிழ்ச்சியுடன் கவுதம் கம்பீர் சமூக வலைதள பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொல்கத்தாவும், இன்னும் பெரிய மரபுகளை உருவாக்க வேண்டும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணியை கொண்டு "பெரிய மற்றும் தைரியமான" வரலாற்றை எழுத வேண்டும் என்ற செய்தியுடன் கம்பீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
'நீ சிரிக்கும்போது நான் சிரிக்கிறேன்'
"நீ சிரிக்கும்போது நான் சிரிக்கிறேன். நீ அழும்போது எனக்கு அழுகை வருகிறது. நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெல்வேன். நீ தோற்கும் போது நான் தோற்கிறேன். நீங்கள் கனவு காணும் போது நான் கனவு காண்கிறேன். நீங்கள் சாதிக்கும்போது நான் சாதிக்கிறேன். நான் உன்னை நம்புகிறேன், நான் உன்னுடன் இருக்கிறேன். நான் தான் நீ.
கொல்கத்தா, நான் உங்களில் ஒருவன். உங்கள் போராட்டங்களை நான் அறிவேன், வலிகளையும் அறிவேன். நிராகரிப்புகள் என்னை நசுக்கின, ஆனால் உங்களைப் போலவே, நானும் நம்பிக்கையுடன் எழுந்திருக்கிறேன். நான் ஒவ்வொரு நாளும் அடி வாங்குகிறேன், ஆனால் உங்களைப் போலவே, நானும் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அவர்கள் என்னை பிரபலமாக இருக்க சொல்கிறார்கள், நான் அவர்களை ஒரு வெற்றியாளராக இருக்க சொல்கிறேன். இந்த கொல்கத்தா காற்று என்னுடன் பேசுகிறது. இங்குள்ள தெருக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அவை அனைத்தும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நாம் அனைவரும் சேர்ந்ததுதான் இந்த அணி.
'நாம் ஒன்றாக சில மரபுகளை..'
இப்போது நாம் ஒன்றாக சில மரபுகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் சில பெரிய மற்றும் தைரியமான வரலாறுகளை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டோம் என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்கிறோம். மூவர்ணக் கொடிக்காக எப்போதும் தோளோடு தோள் சேர்ந்து, கைகோர்த்து நிற்போம் என்று அவர் மேலும் கூறினார்.