"அரசுப் பணிக்காகவே பிரதமர் மோடியை சந்தித்தேன்"- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
"அரசுப் பணிக்காகவே பிரதமர் மோடியைச் சந்தித்தேன்" என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்தித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. தனிப்பட்ட காரணங்களுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
“ தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். கடந்த 10 ஆண்டுகள் இதே அரசு தான் டெல்லியில் நீடித்து வருகிறது. அதில் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அதேபோல சென்னை பெருமழையின் போதோ அல்லது தூத்துக்குடி வெள்ள பாதிப்பின் போதோ பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தாரா?
மேலும் பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து அப்பகுதி மக்களை மோடி சந்தித்தாரா..? அரசியல் காரணங்களுக்காகவே பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். பிரதமர் மோடி அரசியல் மட்டும் செய்யாமல் அரசாங்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் வைக்கும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் ஆகும்.
பிரதமர் மோடி ஒரு பகுதிக்கு செல்லும் போது அப்பகுதியில் மாநில மற்றும் மாவட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள் அவரை வரவேற்பது, சந்திப்பது மரியாதை நிமித்தமானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படியே பிரதமர் மோடியைச் சந்தித்தேன். ஆனால் எனக்கும் , பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட உறவு உள்ளது போல சிலர் சமூக வலைதளங்கள் போலி செய்தியை பரப்புகின்றனர். அரசு பணியின் காரணமாகவே பிரதமர் மோடியை சந்தித்தேன்”
இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.