For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜாபர் மனைவியிடமிருந்து பணம் எதுவும் பெறவில்லை” - இயக்குநர் அமீர் விளக்கம்!

03:56 PM Jul 25, 2024 IST | Web Editor
“ஜாபர் மனைவியிடமிருந்து பணம் எதுவும் பெறவில்லை”   இயக்குநர் அமீர் விளக்கம்
Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கு பணம் கைமாறியிருப்பதாக வெளியான தகவலை இயக்குநர் அமீர் மறுத்துள்ளார். 

Advertisement

போதைப்பொருள் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு மற்றும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் பல முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறியிருப்பதாக தகவல் வெளியானது.

அதில் ஜாபர் சாதிக் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து திரைப்பட இயக்குநர் அமீருக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னரே அமீருக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருக்கும் எனக் கூறப்பட்டது. அதற்கு அமீர் மறுப்பு தெரிவித்தார். எங்கும் விசாரணைக்கு ஆஜராகவும் தயார் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் இதுபோன்ற செய்தி பரவுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜாபர் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கு எந்தவிதமான பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24) அன்று சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது.

அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வெறொன்றும் கிடைக்கப் போவதில்லை.

இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை நான் வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார். சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது போன்ற நபர்கள், "இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து.." எப்படியாவது இந்த வழக்கில் என்னைச் சேர்த்துக் கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்?

மத்திய, மாநில அரசுகளோ, தனி நபரோ மானுடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம், ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துகளையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளேன் என்பதைத் தவிர என்னிடம் வேறு குறைகள் ஏதும் இல்லை. என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சிந்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு.  அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதத்தை விதைப்போம்.!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement