"முன்னாள் போலீஸ் அதிகாரி மீது வழக்கு; அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் " - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"முன்னாள் போலீஸ் அதிகாரி மீது வழக்கு தொடுத்துள்ளேன் ; அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்" என அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நண்பர், மறைந்த திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் மணமக்கள் கோ.ராஜ்குமார் – சா.சஜூ தம்பதிகளுக்கு கலப்பு திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன் பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்கின்றனர். ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது சொந்த வாட்ஸ்அப் கணக்கில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அவரின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை, அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளேன்.
இந்துக்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என நான் சொன்னதாக என் பெயரிலேயே வாட்ஸ்அப்பில் பதிவு செய்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் இப்படி பேசி இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன், இன்று அது குறித்து செய்தி வரும் பாருங்கள் ” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக இளைஞரணிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்திருந்தது, ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நட்ராஜ் என தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.