“பூட்ஸ் கால்களால் உதை வாங்கியுள்ளேன்” - தனது ஆரம்பகால போராட்டங்களை நினைவுகூர்ந்த திருமாவளவன்!
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், 1985-இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
பங்கேற்றோர் பங்கேற்கும் ஒன்றுகூடல் - கையெழுத்து இயக்கம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்தி எதிர்ப்பு போராட்டத்திலே மாணவனாக இருந்த நான் வலிந்து சென்று போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடக்கும். அந்த
போராட்டங்களை யாரும் ஒருங்கிணைக்கவில்லை. அதனால் எங்கெங்கே போராட்டங்கள் நடந்தது என வரலாறாக இல்லை.
திருச்சியில் நடந்த மொழிப்போர் மாநாட்டைத் தான் மூன்றாவது மொழிப்போர் என தெரிவித்தோம். இப்போது கூறும் மூன்றாவது மொழிப்போரை நான்காவது மொழிப்பெயர் என்று சொல்ல வேண்டும். அன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டங்களை முன் நின்று நடத்தியது திமுகவின் மாணவர் அணி என்பதை மறுக்க முடியாது.
மாணவரணியைச் சார்ந்த தோழர்கள் போராட்டத்தை வேகமாக தீவிரப்படுத்திய போது போராட்டத்தில் கைது செய்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ் கால்களால் எட்டி எட்டி உதைத்தார்கள். அப்படி உதை வாங்கியவர்களில் நானும் ஒருவன். 1983 - 1988 காலகட்டம் என்பது ஈழ தமிழர்களுக்கான போராட்டக் களமாகவும், இந்தி
எதிர்ப்புக்கான போராட்டக்களமாகவும் அமைந்தது.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய நியான் விளக்கால் ஒளிரும் இந்தி எழுத்துக்களை உடைக்க வேண்டுமென 5 பேர் புறப்பட்டு போனோம். சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கிருந்த எங்களை போலீஸ் கண்டுபிடித்து விரட்டியது. போலீஸ் கைகளில் பிடிபடாமல் இந்தி எழுத்தை உடைக்க வேண்டும் என முயற்சித்து முடியாமல் திரும்பி தப்பித்து போனோம்.
திமுக அரசியல் சட்ட போராட்டத்தின் நகலை எரிக்க நின்ற போது அந்தப்
போராட்டத்திலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டோம். ஆனாலும் அந்தப்
போராட்டத்திலும் நான் கைதாகவில்லை. முக்கியமானவர்கள் மட்டும் கையிலே வைத்து எரித்தார்கள். ஒரு சிலர் மட்டும் திட்டமிட்டு கைதாகி மற்றவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இந்த மொழி உணர்வை, இன உணர்வை, எதிர்ப்புணர்வை திராவிட இயக்கங்களும், பெரியார் இயக்கங்களும் தான் மண்ணில் விதைத்தான என்பதை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். இது எப்படி தமிழ் தேசியத்திற்கு விரோதமாக இருக்க முடியும்?. எல்லோரும் போராடாமல் எப்படி தமிழை காப்பாற்ற முடிந்தது?. பெரியார் மட்டும்தான் செய்தாரா? என சிலபேர் கேள்வி எழுப்புகிறார்கள். ஈழ விடுதலைக்காக பிரபாகரன் மட்டும் போராடவில்லை. ஆனால் பிரபாகரனை மட்டும் நாம் உயர்த்தி பிடிக்கிறோம்.
திமுக ஸ்டாலின் ஆட்சியிலேயே இவ்வளவு சிக்கல்கள், நெருக்கடிகள் இருக்கிறது
என்றால், அப்பட்டமான சனாதனிகளின் ஆட்சி மலர்ந்தால் என்ன ஆகும்?. அவர்களிடம் எப்படி நாம் போரிட முடியும்? எப்படி அவற்றையெல்லாம் தடுக்க முடியும்?. ஆளுநர் இறுதிக்காலத்தில் மகிழ்வாக இருப்பதற்காக, அதிகாரத்தை சுவைத்து கொள்வதற்காக இங்கே அமர்த்தப்படவில்லை. அவர் இறுதி வரை தங்களுடைய கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருப்பதாலேயே அமர்த்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே செயல்படுத்த திட்டமிட்ட ஒவ்வொன்றையும் செயல்படுத்தி டிக் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் அடி நாதத்தில், குரல்வளையில் கை வைக்கிறார்கள். சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கள் கோட்பாடு சாதியை ஒழிப்போம் என அவர்களால் கூற முடியுமா?. பாஜக அரசு இந்தியர்கள் என்று சொல்லாதே இந்துக்கள் என்று சொல். இந்த தேசத்தின்
பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். இந்துக்களுக்கான ராஷ்டிரியத்தை
உருவாக்குவோம். அதற்கான ஒரு அரசாங்கத்தை, சட்டத்தை உருவாக்குவோம் என எண்ணுகிறார்கள்.
இந்தியா என்பதை இந்துத்துவா என மாற்றுவதற்கு ஒரு மொழி, ஒரு கலாச்சாரம்
தேவைப்படுகிறது. பல மொழிகளை ஊக்கப்படுத்தி தேசியவாதம் வளர்ந்து விட்டால் அவர்கள் விரும்புகிற இந்தியாவை கட்டமைக்க முடியாது. ஆரியம் என்ற சனாதனத்தை எதிர்ப்பது தான் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது சனாதன எதிர்ப்பின் இன்னொரு வடிவம்.
எந்த அமைச்சர்களும் அவர்களை தனியாக சந்தித்து பேசும் போது ஆங்கிலத்தில்
பேசுவது கிடையாது. இந்தியில் தான் பேசுகிறார்கள். உடன் இருக்கும் செயலர்கள்
தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்கிறார்கள். அன்னை தமிழை பாதுகாக்க அணி திரள்வோம்”. என்றார்.