“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” - மாணவர் சின்னதுரை பேட்டி!
“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தி படித்தேன்” என சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சாதி வன்மத்தால் சக மாணவர்களால் தாக்கப்பட்ட 17 வயது சிறுவன் சின்னசாமி, தற்போது நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். இவரின் படிப்புத்திறனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் சார்பில் பொது விசாரணைக்காக சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன். பாளையம் கோட்டையில் உள்ள சென் சேவியர் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளேன். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடங்க உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் என்னை ஊக்குவித்ததால் தான் என்னால் இவ்வளவு பெரிய சாதனையை எட்ட முடிந்தது. அப்பா இல்லை, அம்மா, தங்கை மட்டுமே உள்ளனர். குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு உள்ளது. எவ்வளவு பெரிய நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் படிப்பை விடக்கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும் என படிப்பில் கவனம் செலுத்தினேன்.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, படிப்பில் முன்னேறி வர வேண்டும். கல்வியில் முன்னேறி வந்தால் மட்டுமே செய்த தவறை அவர்கள் உணர்வார்கள்.” என மாணவன் சின்னத்துரை தெரிவித்தார்