"பிறர் என்னை கொண்டாடுவதை விரும்பவில்லை" - ஃபகத் ஃபாசில்!
"பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை" என நடிகர் ஃபகத் ஃபாசில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் ஃபகத். சிறந்த கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் பாசிலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். இப்படத்தில் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபகத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனுடன் ஃபகத் ஃபாசிலின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபகத் ஃபாசில், "பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை" எனக் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“ மக்கள் ஒரு சினிமாவைப் பற்றி திரையரங்கிலோ அல்லது வீட்டிற்கு வரும் வழியிலோ மட்டும் பேசினால்போதும். உணவு மேசை வரை அதைக் கொண்டு வர வேண்டாம் என நினைக்கிறேன். வாழ்க்கையில், சினிமாவைவிட செய்வதற்கு நிறைய இருக்கிறது.
ஒரு நடிகனாக இருப்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது. காரணம், ஒரு நடிகனாக எனக்கு நிறைய எல்லைகள் உண்டு. கேமரா கோணத்திலிருந்து உடை வரை அதிகப்படியான ஆள்களை சார்ந்திருக்க வேண்டும். ஆனால், தயாரிப்பாளராக எனக்கு முழு சுதந்திரம் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். நடிகனாக இருந்தாலும் பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை.
என் படங்கள் பிடித்திருந்தால் பாருங்கள். பிடிக்கவில்லையென்றால் தவிர்த்து விடுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், ஆடுஜீவிதம், ஆவேஷம், வருஷங்களுக்கு ஷேஷம் படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெற்றதற்கு முதன்மையான காரணம் இவை எல்லாம் நல்ல படங்கள் என்பதால்தான். ஒவ்வொன்றும் வேறுவேறு பாணிகளைக் கொண்ட திரைப்படங்கள். ஆனால், ரசிகர்கள் அதை வரவேற்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான முயற்சிகளையும் எதிர்பார்க்கின்றனர்.
என் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், “அடுத்த 5 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். பல பரிசோதனை படங்களை எடுத்தாலும் அதற்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுதான் முக்கியமான காலகட்டம்.” திரைப்படங்களை இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால், என்னால் எழுத முடியும் என ஷியாம் புஷ்கரன் சொல்வார். பார்க்கலாம்.”
இவ்வாறு நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்தார்.