“எனக்கு சம்பளம் வேண்டாம்...” - பாக். அதிபர் முடிவுக்கு காரணம் என்ன?
பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார்.
இதையடுத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், அதிபர் தேர்தலும் அந்நாட்டில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி வெற்றி பெற்றார். அதன்படி பாகிஸ்தானின் 14-வது அதிபராக மார்ச் 10-ம் தேதி ஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்றார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடி காரணமாக தனது பதவிக் காலம் முடியும் வரை தனது சம்பளம் வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, கருவூலத்தில் மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 'SK23' படத்தின் ரிலீஸ் எப்போது? - வெளியான புதிய தகவல்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி, சம்பளமாக 8 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.