”அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை” - முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் ஒபிஎஸ் பேட்டி!
கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று, சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக்கு பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக உரிமை மீட்புக்குழு விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத். மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஒ. பன்னீர்செல்வம். அவர் பேசியது, “முதல்வர் ஸ்டாலினின் உடல்நலன் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன். மு.க. முத்து-வின் மறைவுகுறித்தும் விசாரித்தேன். அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றியவன் நான். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைத்ததாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது வருத்தம்தான். தேர்தலில் ஒன்றுசேர்ந்த பாஜக - அதிமுகவுக்கு வாழ்த்துகள்; பிரதமர் மோடியுடன் கூட்டணிவைத்த எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்துகள்” என்றார்.
ஏற்கனவே காலை நடைப்பயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை ஒ.பன்னீர் செல்வம் சந்தித்தார். பாஜக உடனான கூட்டணி முறிவை அறிவித்துள்ள நிலையில் ஒரே நாளில் இருமுறை முதல்வருடனான ஒ.பன்னீர் செல்வத்தின் சந்திப்பு அரசியலில் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.