For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை” - மேடையில் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

திரைப்பட நிகழ்ச்சியில் முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்கு இயக்குநர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
05:54 PM Jan 26, 2025 IST | Web Editor
“யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை”   மேடையில் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்
Advertisement

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டல் ராதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின், ஒருமையில் முகம் சுளிக்கும் வகையில் மேடையில் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு இயக்குநர் லெனின் பாரதி, பாடலாசிரியர் தாமரை, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று(ஜன.26) நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், மிஷ்கின், அனுராக் காஷ்யப்,டாப்சி பன்னு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியபோது, “வெற்றி என்னை சாஃப்ட்டாக பேச சொன்னார். பகிரங்க மன்னிப்பு கேட்க வந்துள்ளேன். தாமரை என்னை விமர்சித்து பேசியிருந்தார். அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் ‘வெற்றி’ தான் என்னை அப்படி பேச வைத்ததாக சொல்லியிருந்தார். 18 ஆண்டு போராடி வருகிறேன். வெற்றி என் தலைமேல் இருந்திருந்தால் இந்நேரம் நான் பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படம் செய்திருக்க வேண்டும். அதேபோல் எனக்கு மிகவும் பிடித்த லெனின் பாரதி என்னை விமர்சித்திருந்தார். தத்துவ ரீதியான விமர்சனம். அவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அருள்தாஸையும் எனக்கு பிடிக்கும். அவர் முகத்தில் கருணை இருக்கும். அவருடன் வேலை செய்ய வேண்டும் நினைத்திருக்கிறேன். அவர் என்னை திட்டி பிரபலமாக ஆகிவிட்டார். அவருக்கும் என்னுடைய மன்னிப்பை தெரிவித்துகொள்கிறேன். தொடர்ந்து சசி,லட்சுமி ராமகிருஷ்ணன், தானு மற்றும் என்மேல் செருப்பை எறிவேன் என்று சொன்ன நண்பர் என அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அமீரிடமும், வெற்றிமாறனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முகம் சுழிக்கும் வகையில் பேசியதற்கு அவர்கள் சிரித்தார்கள் என நிறைய பேர் அவர்களைத் திட்டினார்கள். அந்த நிகழ்வில் நான் பேசும்போது எல்லோரும் சிரித்தார்கள். அதில் சில வார்த்தைகள் எல்லைமீறிவிட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை. விஷாலும் நானும் சண்டைபோடும்போதும், ஒருவார்த்தை கூட மோசமாக நான் பேசவில்லை.

மேடையில் பேச நாகரீகம் வேண்டும் என சொல்கிறார்கள். அது அரசியல் மேடை அல்ல. கூத்து செய்யும் கலைஞர்கள் மேடை. கிராமங்களில் நடக்கும் கூத்தில் சில வார்த்தைகளை நா கூசும் அளவிற்கு பேசுவார்கள். அது ஒருவிதமான வெளிப்பாடு, அது ஒரு வகையான நகைச்சுவை. அதுபோல்தான் நானும் பேசினேன். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில் என் ஆழ்மனதில் இருந்துதான் பேசினேன். திருக்குறளில் காமத்துப்பால் இல்லையா? பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையில் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை எத்தனை முறை குறிப்பிட்டிருந்தார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த 3 நாட்களாக டிவியில் என்னை பற்றிதான் செய்திகள் இடம்பெற்றன. என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் வெற்றிமாறனிடம் கேளுங்கள்”

இவ்வாறு மிஷ்கின் பேசியிருந்தார்.

Tags :
Advertisement